இராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் அருகே இளங்காமணி கிராமத்திற்குச் சொந்தமான மயானத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அங்கிருந்த கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி, 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று மயானத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.இளங்காமணி கிராமத்திற்குச் சொந்தமான மயானத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அங்குள்ள கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மயான ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் பல்வேறு கட்டங்களில் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இதையடுத்து, மயானத்தை மீட்டுத் தர வலியுறுத்தி, மயானத்தில் குடியேறும் போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, இந்தப் போராட்டத்தில் ஹரிநாடார் உள்ளிட்ட சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் தலைமையில் பொதுமக்கள் பங்கேற்றனர். தாமரைக்குளம், இரட்டை ஊரணி, கடுக்காய்வலசை, சேதுநகர், கோரவள்ளி, கும்பரம், வேதாளைஉள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் பெண்கள் பலர் தலையில் ஓலைப்பாய்களைச் சுருட்டி வைத்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் மயானத்தின் மையப்பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மயானத்தில் குடியேற முயன்ற மக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதற்கிடையே, போராட்டம் குறித்து தகவல் அறிந்த ஏஎஸ்பி சந்திரன், துணை காவல் கண்காணிப்பாளர் அருணாச்சலம் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, இளங்காமணி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பலரும் இதே மயானத்தில் உடல்களை அடக்கம் செய்யபடுவதுடன், , பெரும்பாலான கல்லறைகள் உள்ளதால், தற்போதைய சூழலில் உடல்களை மயானத்தில் அடக்கம் செய்ய முடியாமல் மிகுந்த அவதியுற்று வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே மனு அளித்து பல நாட்கள் ஆகியும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். மயான ஆக்கிரமிப்பை அகற்றி, தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அவர்கள் உறுதியாக தெரிவித்தனர்.இதையடுத்து, மயானம் தொடர்பான பிரச்சினைக்கு 10 நாட்களுக்குள் உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். மேலும், மயானப் பகுதியில் தற்காலிகமாக கற்கள் வைத்து அடைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து பொதுமக்கள்போராட்டத்தை கைவிட்டனர். மயான ஆக்கிரமிப்பு பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது