அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்து கவர்களில், இந்தியில் எழுத்து அச்சிடப்பட்டிருக்கும் சம்பவம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இதற்கு முன்னர் இப்படி இருந்தது கிடையாது என்றும்.. தவெக ஆட்சியில்தான் இந்தி சைலண்டாக நுழைந்திருக்கிறது எனவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் கூட, இந்தியை கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் தவெக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர், இந்தி திணிப்பு என்பது நார்மலைஸ் செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறுகின்றனர். இப்படி இருக்கையில்தான் கோயம்புத்தூர் மற்றும் கரூர் அரசு மருத்துவமனைகளில் இந்தி எழுத்து அச்சிடப்பட்ட மாத்திரை கவர்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன.
அரசு மருத்துவமனைகளில் மாத்திரை கொடுக்கும் பேப்பர் கவர்களில், மாத்திரையை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்? காலையா? மதியமா? மாலையா? என அச்சிடப்பட்டிருக்கும். இதுநாள் வரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்தான் அச்சிட்டு இந்த கவர் விநியோகிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது முதல் முறையாக தமிழ், ஆங்கிலத்துடன் சேர்த்து இந்தி எழுத்தும் அச்சிடப்பட்ட கவரில் மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றன.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா, "தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது போல! முதலில் கரூர்.. இப்போது கோவையிலும் அதே நிலமை.." என பதிவிட்டு இந்தி எழுத்துகளுடன் விநியோகிக்கப்பட்ட மருந்த கொடுக்கும் பேப்பர் கவர்களின் போட்டோவையும் ஷேர் செய்திருக்கிறார்.
இது ஏதோ இன்று புதியதாக நடக்கும் விஷயம் கிடையாது. கடந்த வாரம்தான் தூத்துக்குடியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வழிக்காட்டி பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலத்துடன் சேர்த்து இந்தி எழுத்தும் அச்சிடப்பட்டிருந்தது. இதை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தன. பின்னர், இந்திய எழுத்துக்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டது. இப்படி நடந்து கொஞ்ச நாட்களிலேயே மீண்டும் இந்தி மொழி சர்ச்சை தற்போது வெடித்திருக்கிறது.