ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அவ்வப்போது சாலைகளைக் கடப்பதும், சாலையோரங்களில் நிற்பதும், வாகனங்களில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று திம்பம் ஆசனூர் சாலையில் திடீரென உலா வந்தது. அப்போது அந்த வழியாக வந்த கருப்பு நிற காரை யானை வழிமறித்தது. காரின் அருகே சென்ற யானை, தனது காலால் காரின் கதவை உதைத்து பார்த்ததுடன், சிறிது நேரம் அங்கேயே நின்று காருக்குள் இருந்தவர்களை அச்சத்தில் ஆழ்த்தியது. பின்னர் திடீரென வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. யானை காரை காலால் உதைத்த சம்பவத்தால், காருக்குள் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடையேயும் பரபரப்பு ஏற்பட்டது. ஆசனூர் வனப்பகுதியை ஒட்டிய சாலைகளில் யானைகள் அடிக்கடி வெளியேறி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், வனத்துறையினர் இரவு, பகல் என தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு, யானைகள் சாலைக்கு வருவதை கண்காணிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், யானைகள் சாலைக்கு வரும்போது வாகன ஓட்டிகள் பாதுகாப்பான இடத்தில் நின்று, யானைக்கு அருகில் செல்லாமல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.