இடைத்தேர்தல் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் நேற்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதிகளிலும், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி, மேற்கு வங்கத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர், அஸ்ஸாம் மாநிலத்தின் நாகோன் மக்களவைத் தொகுதியிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (அக். 6) நடைபெற்றது.
இத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் பரந்தாமன், தவெக சார்பில் மரகதம் குமரவேல், அதிமுக சார்பில் கணிதா சம்பத் உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் சுகன்யா, தவெக சார்பில் சத்யபாமா, அதிமுக சார்பில் பானுமதி உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசியல் கட்சிகள் சார்பில் 6 பேரும், சுயேச்சைகளாக 5 பேரும் மொத்தமாக 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த், காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம், திமுக வேட்பாளர் சேதுசெல்வம், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அ.மு.சலீம் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது.
நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது.
ஒரு சில வாக்குச்சாவடிகளில் மின்வெட்டு உள்ளிட்ட காரணங்களால் வாக்குப்பதிவு சிறிதுநேரம் தடைபட்டது. இதனையொட்டி, மாலை 6 மணிக்கு வரிசையில் நிற்போருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது.
இந்த நிலையில், மதுராந்தகத்தில் வாக்குப் பதிவு நிறைவில் 85.97 சதவிகித வாக்குகளும், தாராபுரத்தில் 80.31 சதவிகித வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் 93.22 சதவிகித அளவுக்கு வாக்குகள் பதிவான நிலையில், இடைத்தேர்தலில் 85.97 சதவிகிதம் மட்டுமே பதிவாகியுள்ளது. இதேபோல், தாராபுரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் 89.89 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், இடைத்தேர்தலில் 80.31 சதவிகிதம் மட்டுமே பதிவாகியுள்ளது.
இதனிடையே, வாக்குப்பதிவு நிறைவடைந்த வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, சீல் வைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு கட்சி முகவர்களின் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகத்தின் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாதக என ஐந்து முனைப் போட்டி நிலவும் நிலையில், இவ்விரு தொகுதிகளிலும் வெள்ளிக்கிழமையில் (அக். 9) வாக்கு எண்ணிக்கை அதே நாளில் முடிவும் அறிவிக்கப்படுகிறது.