ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்கா போலீஸ் எல்லைக்குட்பட்ட சின்ன மாயாகுளம் கிராமம் அருகே உள்ள காட்டு கருவேல் பகுதியில், நேற்று காலை இரண்டு நபர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை 09.15 மணியளவில், சின்னமாயாகுளம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கோபி (35) மற்றும் ரியாசுதீன் (55) ஆகிய இருவரும் சின்னமாயாகுளம் கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டு கருவேல் பகுதியில் சடலமாகக் கண்டறியப்பட்டனர்.
இறந்து கிடந்த இவர்களில் ரியாசுதீன் என்பவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்து பின்னர் இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர். மற்றொருவரான கோபி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இறந்த இருவரின் மூக்கு மற்றும் கண்ணில் இருந்து ரத்தம் கசிந்த நிலையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்களின் உடலின் வேறு எந்தப் பகுதிகளிலும் வெளிப்படையான காயங்கள் அல்லது வெட்டுத் தழும்புகள் ஏதும் இல்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்த ஏர்வாடி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூக்கு மற்றும் கண்ணில் ரத்தம் வந்த நிலையில் ஒரே பகுதியில் இரண்டு பேர் உயிரிழந்திருப்பது கொலையா அல்லது விஷமருந்தி தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து எஸ்பி சந்தீஷ் தெரிவிக்கையில், நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.