மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் கைது செய்யப்பட்டுள்ளார். ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் ஜாபர் சித்திக். இவரது மனைவி ஷோபனா. ஜாபர் சித்திக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக கடந்த ஜூலை 4ம் தேதி அன்று பொறுப்பேற்றார்.இந்நிலையில், அவரது மனைவி ஷோபனா, அவரது கணவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், தன்னைத் தாக்கி சித்திரவதை செய்து துன்புறுத்தியதாகவும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தொடர்பான விசாரணை மேற்கொள்ள்ப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இது தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.இந்த புகாரின் அடிப்படையில், வேலூர் குற்றப் புலானாய்வுத் துறையினர் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி வேலூர் சிபிசிஐடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் பரமக்குடியில் உள்ள ஜாபர் சித்திக்கின் முகாம் அலுவலகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது முகாம் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு உள்துறை செயலாளரால் ஜாபர் சித்திக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இந்நிலையில், விசாரணைக்காக வேலூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட ஜாபர் சித்திக்கிடம் காவல் துறையினர் இரவு முழுவதும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையைத் தொடர்ந்து, ஜாபர் சித்திக்கை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.ஜாபர் சித்திக்கை கைது செய்த சிபிசிஐடி காவல் துறையினர் அவரை வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைத்தனர். மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது