திண்டுக்கல் விஸ்வகர்ம அறக்கட்டளையின் 25ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், விஸ்வகர்ம அறக்கட்டளை, விஸ்வகர்ம மகாஜன சபா மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது.
திண்டுக்கல் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள விஸ்வகர்ம மகாஜன சபா பிரார்த்தனை மண்டபத்தில் நடந்த இம்முகாமிற்கு விஸ்வகர்ம மகாஜன சபா மற்றும் விஸ்வகர்ம அறக்கட்டளை தலைவர் சந்தானம் ஆச்சாரி தலைமை தாங்கி வரவேற்றார்.
விழாவில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.தெய்வம், ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் சுபாஷினி, அறக்கட்டளை இயக்குனர் என்.சாமிக்கண்ணு ஆச்சாரி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து, 100க்கும் மேற்பட்ட ஏழை, எளியவர்களுக்கு வேஷ்டி, சேலை மற்றும் நலத்திட்ட உதவிகளையும், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையையும் வழங்கினர்.
இதில் மகாசபை செயலாளர் உதயகுமார், பொருளாளர் இளங்கோ, அறக்கட்டளை நிர்வாகி சிவகுமார், இயக்குனர்கள் செந்தில்குமார், ராமசாமி, பாலகுரு, குமரேசன், சின்னு ஆச்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா முடிவில் அறக்கட்டளை செயலாளர் பிரபு ஆச்சாரி நன்றி கூறினார்.