உதகமண்டலம் ரயில் நிலையம் முன்புறம் போர்டிகோ நுழைவு வாயிலில், ஊட்டி இருப்புப் பாதை காவல் நிலையம் சார்பில் Prestige Public School, Calicut, Kerala பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் ரயில் பயண பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி எச்.ருக்மணி மற்றும் பெண் தலைமை காவலர் திருமதி ஏ.நாகஜோதி ஆகியோர் மாணவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான முக்கிய அறிவுரைகளை வழங்கினர்.ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது. கதவு மற்றும் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யக்கூடாது. ரயில் தண்டவாளத்தில் நடக்கவோ, விளையாடவோ, புகைப்படம் அல்லது செல்ஃபி எடுக்கவோ கூடாது. அறிமுகமில்லாத நபர்களிடம் உணவு, பானம், பரிசுப் பொருட்களை பெறக்கூடாது. தனிப்பட்ட தகவல்களை பகிரக்கூடாது. சுற்றுலா மற்றும் ரயில் பயணங்களின்போது ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் அறிவுரைகளைப் பின்பற்றி, குழுவை விட்டு தனியாக செல்லக்கூடாது.தவறான தொடுதல், தொந்தரவு அல்லது அச்சுறுத்தல் ஏற்பட்டால் உடனடியாக பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து, துன்புறுத்தல் அல்லது அவசரநிலை ஏற்பட்டால், உடனடியாக “சைல்டு ஹெல்ப் லைன் 1098” என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.“குழந்தைகளின் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு”என்பதை வலியுறுத்தி, மாணவர்கள் தங்களது பாதுகாப்புடன் நண்பர்களின் பாதுகாப்பிலும் அக்கறை கொள்ள வேண்டும் என காவல்துறையினர் எடுத்துரைத்தனர். மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகளை கேட்டறிந்தனர்