ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் தீபாவளி போனஸ்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. வரும் நவம்பர் 8ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட ஏதுவாக இந்திய ரயில்வே சார்பில் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதே போல், பிரபல ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள் தசரா, தீபாவளி ஆஃபர்களை அறிவித்துள்ளன. இதுவரை தீபாவளி ஆன்லைன் ஷாப்பிங்கில் சுமார் ரூபாய் 2,000 கோடிக்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (அக்.14) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விலைவாசி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரவும், பகலும் அயராது உழைக்கும் ஊழியர்களான ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு ஒரு தீபாவளி பரிசாகும்.
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும். ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக மொத்தம் ரூபாய் 2,009 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேத்துறையில் பணியாற்றும் சுமார் 11.40 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படவுள்ளது" எனத் தெரிவித்தார். மத்திய அரசின் அறிவிப்பால் ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய அரசின் கீழ் உள்ள துறைகளில் மிகப் பெரிய துறை ரயில்வே ஆகும். ஆண்டுதோறும் ரயில்வேத்துறை ஊழியர்களுக்கு மத்திய அரசு தீபாவளி போனஸ் வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...