திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகா, சித்தமல்லி பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால், அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணியாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, இந்த ஊர் மட்டுமின்றி சுற்றியுள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் நம்பியுள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கானோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இந்நிலையில், இங்கு பகல் நேரப் பணிக்குப் பிறகு மருத்துவர்கள் யாரும் பணியில் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரவு நேரங்களில் செவிலியர்கள் மட்டுமே பணியில் இருக்கும் சூழலில், விஷக்கடி, விபத்து காயம், தீவிர மூச்சுத்திணறல் மற்றும் பிரசவ வலி போன்ற அவசர காரணங்களுக்காக வரும் நோயாளிகள் மருத்துவர் இன்றி தவிக்கின்றனர்.
மருத்துவர் இல்லாததால் நோயாளிகளை 30 கி.மீ தொலைவில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர். இதனால் நள்ளிரவு நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைப்பதிலும், தொலைதூரப் பயணத்தின் போது வழியிலேயே நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதிலும் பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், அவசரத் தேவைக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் இரவில் மருத்துவர் இல்லாதது பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குகிறது. எனவே, மாவட்ட ஆட்சியரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, கூடுதல் மருத்துவர்களை நியமித்து 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.