விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.மேல்மலையனூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதையடுத்து அம்மனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. உற்சவர் அம்மனுக்கு பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அங்காள பரமேஸ்வரி அம்மன் சமேத தாண்டேஸ்வரர் திருக்கோலத்தில் உட்பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நள்ளிரவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வான ஊஞ்சல் உற்சவத்தையொட்டி, இரவு 11.15 மணியளவில் மேளதாளங்கள் முழங்க, வடக்கு வாசல் வழியாக உற்சவர் அம்மன் ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு அம்மனை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.பக்தர்கள் கற்பூர தீபம் ஏற்றி, “ஓம் சக்தி அங்காளம்மா… ஓம் சக்தி அங்காளம்மா…” என பக்தி முழக்கமிட்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அம்மனும் சிவபெருமானும் ஊஞ்சலில் முன்னும் பின்னுமாக அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த ஆன்மிக நிகழ்வில் பங்கேற்ற பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் அம்மனை தரிசனம் செய்தனர்.இரவு 12.10 மணியளவில் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. பின்னர் அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து உற்சவர் அம்மன் கோவில் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.முன்னதாக, அதிகாலையில் அமைச்சர்கள் ஆனந்த், தென்னரசு ஆகியோர் கோவிலுக்கு வந்து அங்காள பரமேஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர்.போலீசார் பாதுகாப்பு சிறப்பு பேருந்துகள் இயக்கம்விழாவையொட்டி பக்தர்களின் பாதுகாப்பிற்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் சார்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேல்மலையனூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழுத் தலைவர் ஏழுமலை, அறங்காவலர்கள் பச்சையப்பன், சுரேஷ், மதியழகன், சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளர் சதீஷ், கணக்கர் மணி, கோவில் மணியம் குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்