தன்னை காதலித்து ஏமாற்றியதாக, சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்ட வஹிதா பேகம் என்ற பெண் இன்ஸ்டா பிரபலம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் (28) சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளரான முத்துக்குமரன், தன்னை காதலித்து ஏமாற்றியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் வஹிதா பேகம் வீடியோ வெளியிட்டு குற்றஞ்சாட்டி இருந்தார். இது ஒருசில நாள்களாக சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.வஹிதா பேகம் வெளியிட்ட வீடியோவில் முத்துக்குமரன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அதனால் தற்கொலைக்கு முயன்றதாகவும், திருமணம் செய்து கொள்வதாக பேசியே மயக்கிவிட்டார் எனவும் கூறியிருந்தார்.தொடர்ந்து, முத்துகுமரனை குற்றஞ்சாட்டிய வஹிதா பேகம் சிகரெட் புகைப்பது போன்றும், மது அருந்துவது போலவும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பேசுபொருளானது.இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் அருகே நெசப்பாக்கத்தில் வசித்துவரும் முத்துக்குமரன், வஹிதா பேகம் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தானும் வஹிதா பேகமும் நண்பர்களாகப் பழகி வந்ததாகவும், தங்களுக்குள் காதல் உறவு எதுவும் இருந்ததில்லை எனவும் கூறியுள்ளார்.மேலும், இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது இயல்பாகவும் நகைச்சுவையாகவும் உரையாடிய நிலையில், அவற்றில் சில உரையாடல்கள் காணொலியாகப் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், அந்த உரையாடல்களில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் தேர்வு செய்து இரண்டு காணொலிகளை வஹிதா பேகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் எனவும் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.மேலும் அவற்றைத் திருத்தி, அதனுடன் இணைக்கப்பட்ட வாசகங்கள் மூலம் தான் அவரைக் காதலிப்பதாகக் கூறி, நம்ப வைத்து பின்னர் ஏமாற்றியதுபோல் சித்தரிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ள அவர், வஹிதா பேகத்துக்கு தான் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், அவர் தற்கொலைக்கு முயன்றதற்கு தான் காரணம் என்றும் வெளியான குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து, கடந்த அக்டோபர் 8ஆம் தேதி வஹிதா பேகத்துடன் தொலைபேசியில் பேசியபோது தனது நடவடிக்கைகள் மீதான அதிருப்தி காரணமாகவே காணொலிகளைப் பதிவிட்டதாக வஹிதா தெரிவித்துள்ளதாகவும், தங்களுக்குள் காதல் உறவு இருந்ததில்லை என்பதையும் அந்த உரையாடலில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் முத்துக்குமரன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் அவர் வெளியிட்ட காணொலிகளில் தனது முகம், பெயர், குரல் ஆகியவை இடம்பெற்றுள்ளதால் சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனங்களையும் அவதூறான கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். இந்தப் பதிவுகள் தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில்முறை நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.எனவே, உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காணொலிகளின் அசல் பதிவுகள், சமூக வலைதளக் கணக்கு விவரங்கள் மற்றும் பதிவேற்றம் தொடர்பான தகவல்களைப் பாதுகாப்பதுடன், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள காணொலிகள் மற்றும் தொடர்புடைய பதிவுகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது