இதய ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மக்களிடையே ஊக்குவிப்பதற்கான தனது தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக செப்டம்பர் 29 அன்று அனுசரிக்கப்படும் உலக இதய தினத்தை முன்னிட்டு, மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து ஹார்ட் ஆஃப் டெல்டா என்ற பெயரில் 5 கிலோமீட்டர் விழிப்புணர்வு நடைப்பயணத்தை (வாக்கத்தான்) சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தின.
தஞ்சாவூர் மாநகராட்சியின் பொறுப்பு மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி மற்றும் கயல் தொலைக்காட்சி தொடரின் நடிகை அபிநவ்யா ஆகியோர் இதய விழிப்புணர்வுக்கான இந்த நடைப்பயண நிகழ்வை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில், தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவரும் மூத்த மருத்துவருமான டாக்டர். பி. கேசவமூர்த்தி, இதயவியல் நிபுணர்கள் டாக்டர். சபரி கிருஷ்ணன் மற்றும் டாக்டர். சீனிவாசன், துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர். வி. பிரவீன், பொது மேலாளர் திரு. சிவகுமார் சண்முகம் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் திரு. மணிவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவர்கள், சுகாதார வல்லுநர்கள், மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகளின் குடும்பத்தினர், மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய இந்நிகழ்வில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள கமலா சுப்பிரமணியம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த நடைப்பயணம், 5 கிலோமீட்டர் தூரம் பயணித்து, தொடங்கிய அதே அமைவிடத்திலேயே நிறைவடைந்தது.
ஹார்ட் ஆஃப் டெல்டா விழிப்புணர்வு நடைப்பயண பங்கேற்பாளர்களுக்கு பிரத்யேக டி-சர்ட்டுகள், நினைவுப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் அன்பு பரிசாக வழங்கப்பட்டன. இதய ஆரோக்கியம், இதய நோய்க்கான ஆபத்தை உருவாக்கும் காரணிகள், இதய நோய் வராமல் தடுக்கும் முதன்மைத் தற்காப்பு முறைகள் மற்றும் குறித்த காலஅளவுகளில் மருத்துவப் பரிசோதனைகள் செய்வதன் முக்கியத்துவம் ஆகிய அம்சங்கள் குறித்து மருத்துவ நிபுணர்களின் சுகாதார விழிப்புணர்வு உரைகள் மற்றும் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடல் அமர்வுகள் இடம்பெற்றன. பங்கேற்பாளர்கள் சிறப்பு மருத்துவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, இதய ஆரோக்கியம் தொடர்பான ஐயங்களுக்கு தீர்வு காணவும், தெளிவான விளக்கம் பெறவும் இந்த அமர்வுகள் நல்ல வாய்ப்பாக அமைந்தன.
இதயவியல் துறைத் தலைவரும் மூத்த மருத்துவருமான டாக்டர். பி. கேசவமூர்த்தி கூறுகையில், “இதய ஆரோக்கியம், உடற்பயிற்சியின் அவசியம் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளின் தேவை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இந்த நடைப்பயணத்தை ஏற்பாடு செய்வதன் நோக்கமாகும். ‘இதய நோய்கள் நம் கண்முன்னேயே மறைந்திருக்கலாம்: ஒரு துடிப்பைக் கூட தவறவிடாதீர்கள்’ என்ற உலக இதய தினத்தின் கருப்பொருள், எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் கண்டு உரிய நேரத்திற்குள் சிகிச்சை பெற செயல்படுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இதய ஆரோக்கியத்திற்குத் தொடர் கவனமும் தடுப்பு நடவடிக்கைகளும் தேவை. சுறுசுறுப்பாக இருப்பது, சீரான உணவைப் பின்பற்றுவது, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது, புகையிலையைத் தவிர்ப்பது மற்றும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பைக் கட்டுப்பாட்டில் வைப்பது போன்ற எளிய நடைமுறைகள் மூலம் இதய நோய் பாதிப்புகள் வருவதற்கான அபாயத்தைக் குறைக்க முடியும்" என்றார்.
மேலும் அவர் பேசுகையில், "இந்தியாவில் இதய நோய்கள் தொடர்ந்து ஒரு முக்கியப் பொது சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது; இதில் உயர் ரத்த அழுத்தம் மிக முக்கியமான ஆபத்துக் காரணியாகும். உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, இந்தியாவில் சுமார் 22 கோடி மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட காலஅளவுகளில் செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைகள் மூலம் இதய நோய்களுக்கான அபாயங்களை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியும். நோயின் அறிகுறிகள் தோன்றிய பிறகு மட்டுமே இதய ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்குவது ஏற்புடையதல்ல; நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல்,ஆகியவை நமது தினசரி வாழ்வின் ஒருங்கிணைந்த ஒரு அம்சமாக மாறுவது அவசியம்" என்று தெரிவித்தார்.
நோய் வருமுன் காக்கும் சுகாதார முறையை மேம்படுத்தி, சிறந்த ஆரோக்கியத்திற்கான முன் முயற்சிகளை எடுக்கச் சமூகத்தை ஊக்குவிப்பது இம்மருத்துவமனையின் பரந்த குறிக்கோளின் ஒரு பகுதியாகும். அனைத்து வயதினருக்கும் விரிவான இதயநல பரிசோதனைகளை மருத்துவமனை வழங்கி வருகிறது; குறிப்பாக இதய நோய்க்கான இடர்வாய்ப்புள்ள அல்லது இதயநோய் இருந்த குடும்ப வரலாறு உள்ளவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. நோய்க்கான அபாயக் காரணிகளை முன்கூட்டியே கண்டறிந்து, மக்கள் சிறந்த இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கத் தேவையான மருத்துவ வழிகாட்டுதல்களையும், பராமரிப்பையும் தனது இதய சிகிச்சை சேவைகளின் மூலம் வழங்குவதை இம்மருத்துவமனை முக்கிய இலக்காக கொண்டு அர்ப்பணிப்பு மிக்க சேவையை வழங்கி வருகிறது.