மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஜூன் 12ம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படாததால், திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குருவை சாகுபடி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனால் குருவை சாகுபடியை நம்பியிருந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே குருவை சாகுபடி பாதிப்பால் பொருளாதார நெருக்கடியை சந்தித்த விவசாயிகள், சம்பா சாகுபடியையாவது முழுமையாக மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பா சாகுபடிக்காக செப்டம்பர் 1ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை தொடங்கினர்.
பல விவசாயிகள் நகைகளை அடமானம் வைத்தும், கடன் பெற்றும் விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்களை வாங்கி நெல் விதைப்பு பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
நெல் விதைத்து 10 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில், சில பகுதிகளில் பயிர்கள் முளைத்துள்ளன. ஆனால், பல்வேறு பகுதிகளில் விதைக்கப்பட்ட நெல் முளைக்காமலும், முளைத்த பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
வயல்களில் தற்போது தண்ணீர் இல்லாததால் முளைத்துள்ள சம்பா நெற்பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், வயலில் விதைக்கப்பட்ட நெல்மணிகளும் தண்ணீர் கிடைக்காததால் மடிந்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
சம்பா சாகுபடிக்காக ஏற்கனவே கடன் வாங்கி செலவு செய்துள்ள நிலையில், பயிர்கள் பாதிக்கப்பட்டால் விவசாயிகள் மேலும் கடுமையான பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பா பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோட்டூர் கடைவீதியில் விவசாய சங்கத்தினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, தண்ணீர் திறக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய தலைவர் கே.எம்.அறிவுடையநம்பி, விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பி.சௌந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் ஒன்றிய செயலாளர் எம். செந்தில்நாதன், ஒன்றிய துணை செயலாளர்கள் பி. பரந்தாமன், எம். சிவா சண்முகம், ஒன்றிய பொருளாளர் எம். ஆர். முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் திடீர் சாலை மறியல் காரணமாக மன்னார்குடி – திருத்துறைப்பூண்டி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர்.
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடைபெற்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பா பயிர்கள் பாதிக்கப்படுவதற்கு முன்பாக, தேவையான அளவு தண்ணீரை உடனடியாக திறந்து விட்டு பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.