டோரதி - சினிமா விமர்சனம்.
1990-களில் மதுரை மாவட்ட கிராமம் ஒன்றில் நடக்கிறது கதை. அப்பாவின், அண்ணன்களின் சாதிவெறியால் தன் அம்மாவையும் அக்காவையும் இழந்த சுப்புவுக்கு (சனந்த்) சிறுவயதிலேயே நண்பனாகிறார் கார்த்தி (ரிஷிகாந்த்). குடும்பப் பின்னணியால் வன்முறை, கட்டப்பஞ்சாயத்து என்று வளர்கின்றனர் கார்த்தியும் சுப்புவும். இந்த நிலையில் சுப்புவின் வாழ்க்கையில் அண்ணியாக டோரதி (கீர்த்தி சுரேஷ்) வர, அதைத் தொடர்ந்து அவரின் செயல்பாடுகளில் மாற்றம்! அதனால் குடும்பமே சுப்புவுக்கு எதிரியாகிவிட, நண்பர்களின் வாழ்வு என்னவானது என்பதை கவனம் சிதறாமல் சொல்கிறது திரைக்கதை.
கைக்குள் அடங்கிவிடும் கத்தியுடன் முதல் சம்பவத்துக்கு செல்லும்போது உருவாகும் நடுக்கம், பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டிருக்கும் திருநங்கை மீது கோபப்பட்டு வன்முறையைப் பிரயோகிக்கும் தருணம், நெருக்கமானவரின் மரணத்தை உள்வாங்கும் காட்சி என சுப்புவாக சனந்த் எடுத்திருக்கும் அவதாரம் தமிழ் சினிமாவில் துணிச்சலான முயற்சி! குறுகலான லாரிக்குள் சுதந்திரமாக உணரும் சுப்புவின் சந்தோஷத் தருணங்கள், அங்கே வெளிப்படும் உடல்மொழி ஆகியவை இதுவரை நாம் பேசத் தயங்கிய, பேச மறந்த தருணங்கள். வன்முறையின் வார்ப்பாகத் தன்னைத் தகவமைத்துக்கொண்ட கார்த்தியின் ஆக்ஷன் அவதாரம் நேர்த்தி என்றால், அந்தக் கல்லுக்குள்ளும் ஈரம் ஊற்றெடுக்கும் தருணம் உன்னத வெளிப்பாடு. தறிகெட்டு ஓடும் லாரியைப்போல மனதில் உண்டாகும் இந்த மாற்றத்தை உணர்வுபூர்வமாகத் திரையில் பதித்திருக்கிறார் ரிஷிகாந்த். குறிப்பாக, சுப்புவுக்கு நிகழும் வன்முறையின்போது அதை நடக்க விட்டுவிட்டு குற்றவுணர்ச்சியில் குமுறும் தருணம் நட்புக்கும், ஆணாதிக்கப் போக்குக்கும் இடையிலான கபடி ஆட்டம்!
டோரதியாக கீர்த்தி சுரேஷ் சிறிது நேரமே வந்தாலும், படம் நெடுக அவரின் இருப்பை உணர முடிகிறது. ‘விசில் வீரய்யா’வாக வில்லத்தனம் காட்டும் முத்துகுமார், வன்முறை வார்த்தெடுத்த அவரின் மகன்களாக சௌந்தரராஜா, முத்துப்பாண்டி என அனைவருமே ரத்தம் தோய்ந்த அந்த வீட்டின் அடையாளத் தூண்கள்! ஆழமானதொரு பாத்திரத்தில் திருநங்கை ஜீவா சுப்ரமணியன், கார்த்தியின் தயக்கத்தை உடைக்கும் முன்னாள் கேங்ஸ்டர் ராமச்சந்திரன் துரைராஜ், ரிஷியின் காதலியாக முத்தழகி, அம்மாவாக ராஜேஸ்வரி, பள்ளிக்காலச் சிறுவர்கள் என அனைவருமே இந்த டோரதி உலகின் யாதார்த்தங்கள்.
பாலின அடையாளம் என்பது வெறும் பிறப்பு சார்ந்ததல்ல, அது மனம் சார்ந்த உணர்தலும்கூட என்பதைத் துணிச்சலுடன் சொல்கிறாள் டோரதி.
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...