வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மியான்மர் கடற்கரைப் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தப் பகுதி, வடக்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது சுமார் 15.6 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 97.6 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் மையம் கொண்டுள்ளது.
மியான்மரின் மாவ்லமைன் நகருக்கு தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவிலும், யாங்கூன் நகருக்கு தென்கிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலும், மியான்மரின் கோகோ தீவுக்கு கிழக்கு–வடகிழக்கே சுமார் 480 கிலோமீட்டர் தொலைவிலும், இந்தியாவின் அந்தமான் தீவுகளில் உள்ள மாயாபந்தருக்கு கிழக்கு–வடகிழக்கே சுமார் 590 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் இது தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. தொடர்ந்து அடுத்த 3 நாட்களில் வடக்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, மியான்மர் கடற்கரையை ஒட்டி வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கதேச கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாகப்பட்டினம், கடலூர், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து நாகை மாவட்டத்தில் இருண்ட வானிலையின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.